< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
6 Jun 2022 9:19 PM IST

நாமக்கல்லில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணி நிரவலில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத சூழல் தற்போது வரை நிலவி கொண்டிருக்கிறது.

இந்த பிரச்சினையில் உடனடியாக தீர்வு கண்டு, ஊதியம் பெறாமல் துயரத்தினை அனுபவித்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊக்க ஊதியம்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் லோகநாதன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் மலர்க்கண்ணன் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முருகேசன், கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட செயலாளர் செந்தில்செல்வன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்