ராமநாதபுரம்
ராணுவ வீரர் மணிமண்டபம் முன்பு குழந்தைகளுடன் மனைவி போராட்டம்
|ராணுவ வீரர் மணிமண்டபம் முன்பு குழந்தைகளுடன் மனைவி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள கடலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான பழனி கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்தார். அவரை அடக்கம் செய்த இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மணி மண்டபம் கட்டுவதற்காக திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஹவில்தார் பழனியின் தந்தை காளிமுத்து ரூ.5 லட்சம் மதிப்பில் பழனிக்கு அவரை அடக்கம் செய்த இடத்தில் மணி மண்டபம் கட்டி உள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
புதிதாக கட்டப்பட்ட மணி மண்டபத்தை பழனியின் தந்தை காளிமுத்து, தாய் லோகாம்பால் ஆகியோர் திறந்து வைத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தினர், சேது சீமை பட்டாளம் ராணுவத்தினர், தொண்டி ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு, பழனியின் சகோதர, சகோதரி குடும்பத்தினர் மற்்றும், கிராம மக்கள் மலரஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் மணிமண்டப அழைப்பு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று பழனியின் மனைவி வானதி தேவி புகார் கூறினார். மேலும் அவர் மகன் பிரசன்னா, மகள் திவ்யா மற்றும் வானதி தேவியின் தாய், தந்தையருடன் கடுக்களூர் கிராமத்திற்கு வந்து பழனியின் நினைவிடத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து வானதி தேவியிடம், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. மன்சூர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சமரசம் அடைந்த அவர் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகளுடன் சென்று மணி மண்டபத்தின் முன்பு நின்று அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டு சென்றார்.