தென்காசி
7 வீடுகளில் திருடிய புரோட்டா கடைக்காரர் கைது
|குற்றாலம் பகுதியில் 7 வீடுகளில் தங்க நகைகளை திருடிய புரோட்டா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
தொடர் திருட்டு
தென்காசி மாவட்டம் குற்றாலம், மேலகரம், இலஞ்சி, காசிமேஜர்புரம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளில் தங்க நகைகள் திருட்டு போனதாக குற்றாலம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் காசிமேஜர்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் திருப்பதி (வயது 27) என்பவர் ஒரு வீட்டில் திருட்டுப் போன வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் 7 வீடுகளில் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.
புரோட்டா கடைக்காரர்
மேலும் போலீசாரின் விசாரணையில், குற்றாலத்தில் திருப்பதி புரோட்டா கடை நடத்தி வந்துள்ளார். இரவு நேரம் கடை முடிந்த பிறகு பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி உள்ளார். குற்றாலம் அருகே தென்றல் நகர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வெல்டிங் எந்திரத்தை வைத்து ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து சென்றது தெரியவந்தது.
திருப்பதி முதன்முறையாக இந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருடிய நகைகளை தென்காசி மற்றும் நெல்லையில் வங்கிகளில் அடகு வைத்துள்ளார். புரோட்டா கடை நடத்திவிட்டு திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். போலீசார் மீட்ட பொருட்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் நேற்று பார்வையிட்டார். அவருடன் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர் மற்றும் போலீசார் இருந்தனர்.