கோயம்புத்தூர்
வீட்டில் விபசாரம்; 3 புரோக்கர்கள் கைது
|சின்னவேடம்பட்டி அருகே வீட்டில் விபசாரம் நடத்திய 3 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை கணபதி மாநகரை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர், நேற்று முன்தினம் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சின்னவேடம்பட்டி அன்னை பாத்திமா நகர் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அவரிடம் இங்குள்ள ஒரு வீட்டில் அழகான பெண்கள் உள்ளனர், நீங்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆட்டோ டிரைவரிடம் இருந்து பணத்தை பறித்தது புரோக்கர்களான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி(வயது 50), செல்வகுமார்(39), தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகன்(45) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னை, பெங்களூரு மற்றும் தர்மபுரியை சேர்ந்த 3 அழகிகளை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.