சொத்து வரி, மின் கட்டணத்தை தொடர்ந்து ஆவின் பால் விலை உயர்வு... இது தான் தி.மு.க ஆட்சி - ஜி.கே.வாசன்
|தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை தொடர்ந்து தற்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களுக்கு பயன் தர வேண்டும் என்பது சரியானது. அதே சமயம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் கருதி பால் விலையை உயர்த்தாமல் இருந்தால் தான் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பயன் தரும்.
பால் கொள்முதல் விலை உயர்வால், ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல், விற்பனையில் ஏற்படும் செலவை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும். அதாவது கொள்முதல் விலையை ஈடுசெய்ய மாற்று வழியில் பொருளாதாரத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர அன்றாட அத்தியாவசிய தேவையாக இருக்கின்ற பால் விலையை உயர்த்தக்கூடாது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விட்டு, இப்போது பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்படும் என்ற அறிவிப்பால் பொது மக்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை தொடர்ந்து தற்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இது தான் தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள். எனவே தமிழக அரசு ஆவின் பால் பாக்கெட் விலையை உடனடியாக திரும்ப பெற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.