செங்கல்பட்டு
சொத்து தகராறு: சித்தப்பாவை அடித்துக்கொன்ற வாலிபர்
|சொத்து தகராறு தொடர்பாக சித்தப்பாவை அடித்துக்கொன்ற வாலிபர் தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த முகையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பத்மநாபன் (வயது 52). இவருடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர் ராமகிருஷ்ணன் (63) மற்றும் 4 சகோதரிகள் என மொத்தம் 5 பேர் கொண்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பூர்வீக சொத்து முகையூர் கிராமத்தில் இருந்து வந்த நிலையில் அந்த பூர்வீக சொத்து பிரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த சொத்துகளை பத்மநாபன் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பத்மநாபன் வசித்து வந்த கூரை வீடு அருகிலேயே புதிதாக மாடி வீடு கட்டும் பணிகளை அவர் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அவரது அண்ணன் , அவரிடம் சென்று இன்னும் பூர்வீக சொத்தில் யாருக்கு எத்தனை சென்று நிலம் என பிரிக்கப்படாத நிலையில், நீ எப்படி யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இங்கே வீடு கட்டலாம் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
அப்போது அருகில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ராமகிருஷ்ணனின் மகன் ராஜேஷ் (30) தனது தந்தையுடன் சித்தப்பா பத்மநாபன் வாக்குவாதம் செய்து வந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். பத்மநாபனை தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து ராஜேஷ் கத்தி, கட்டையால் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து மயக்கம் அடைந்தார். இதையடுத்து ராஜேஷ், ராமகிருஷ்ணன் அவரது குடும்பத்தினர் ஓடி விட்டனர்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பத்மநாபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பத்மநாபனின் அண்ணன் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ராஜேஷ் ஆகியோரை கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் பத்மநாபனை கொலை செய்யும் அளவிற்கு பின்புலமாக இருந்து தூண்டுதலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என, பத்மநாபன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை கண்டித்து பத்மநாபனின் உறவினர்கள் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்கு வந்த கூவத்தூர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கொலைக்கு தூண்டுதலாக இருந்த மற்ற குற்றவாளிகளையும் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீர் மறியலால் சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.