< Back
மாநில செய்திகள்
சொத்து தகராறில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை
சென்னை
மாநில செய்திகள்

சொத்து தகராறில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
14 Nov 2022 9:46 AM IST

சென்னையில் சொத்து தகராறில், காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

காய்கறி வியாபாரி

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், படவட்டான் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 52). இவர், அதே பகுதியில் தனது மகளின் கணவரான மருமகன் மோகன் என்பவருடன் சேர்ந்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். பொன்ராஜின் மனைவியின் தங்கையை, அந்தோணிராஜ் என்பவர் திருமணம் செய்துள்ளார். இவரது குடும்பத்தினர் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வாழ்கிறார்கள். அந்தோணிராஜின் மகளை, மோகனின் தம்பி முத்துமாடசாமிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். முத்துமாடசாமி தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையில் துரித உணவகம் வைத்துள்ளார். அந்த கடையில் தனது மனைவியின் சகோதரர் அற்புதராஜை (32) முத்துமாட சாமி வேலைக்கு வைத்துள்ளார். இந்த இரண்டு குடும்பத்தினரும் தூத்துக்குடி மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள்.

சொத்து தகராறு

மோகன், முத்துமாடசாமி ஆகியோருக்கு அவர்களது சொந்த ஊரில் 20 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த சொத்தில் தனது பங்கை பிரித்து தரும்படி, முத்துமாடசாமி கேட்டு வந்தார். இதில் மோகன், முத்துமாடசாமி ஆகியோருக்கிடையே பிரச்சினை இருந்துள்ளது. இதில் பொன்ராஜ், தனது மருமகன் மோகனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. சொத்தை பிரித்து முத்துமாடசாமிக்கு கொடுக்கக்கூடாது என்று பொன்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முத்துமாடசாமிக்கு ஆதரவாக அவரது கடையில் வேலை பார்க்கும், அவரது மனைவியின் சகோதரர் அற்புதராஜ் செயல்பட்டு வந்துள்ளார். ஆக மோகன்-முத்துமாடசாமி ஆகியோருக்கான சொத்து பிரச்சினையில், பொன்ராஜூம், அற்புதராஜூம் நேருக்கு, நேர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். பொன்ராஜ், அற்புதராஜூக்கு பெரியப்பா உறவு முறை.

வெட்டிக்கொலை

சமீபத்தில் அனைவரும் சொந்த ஊருக்கு சாமி கும்பிட சென்றனர். நேற்று முன்தினம்தான் அனைவரும் சென்னை திரும்பி வந்துள்ளனர். சென்னை திரும்பி வந்தவுடன், அற்புதராஜ் நேற்று முன்தினம் இரவு, பொன்ராஜ் வீட்டுக்கு சென்றார். அங்கு பொன்ராஜூடன் தகராறில் ஈடுபட்டார். திடீரென்று மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து, பொன்ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.

அதில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்துடன் பொன்ராஜ் கீழே சாய்ந்து விட்டார். அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். பொன்ராஜை கொலை செய்து விட்டேன், என்று தனது மைத்துனர் முத்துமாடசாமியிடம் கூறி விட்டு, அற்புதராஜ் தப்பி ஓடி விட்டார். இதைக்கேட்டு பதறிப்போன முத்துமாடசாமி, இந்த தகவலை தனது உறவினர்கள் அனைவருக்கும் கூறியதாக தெரிகிறது. அபிராமபுரம் போலீசுக்கும் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டது.

தேடுதல் வேட்டை

கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில், அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் போலீஸ் படையுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட பொன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தப்பி ஓடிய கொலையாளி அற்புதராஜை போலீசார் தேடி வருகிறார்கள். செல்போனை 'சுவிட்ச்ஆப்' செய்து விட்ட அற்புதராஜை கைது செய்ய 2 தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்