< Back
மாநில செய்திகள்
சொத்து தகராறில் தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

சொத்து தகராறில் தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது

தினத்தந்தி
|
7 Feb 2023 3:57 PM IST

சொத்து தகராறில் தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 75). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் என 4 பேர் உள்ளனர். இதில் மூத்த மகன் கண்ணன் (வயது 49) என்பவருடன் எத்திராஜ் வசித்து வந்தார்.

எத்திராஜ் தன்னுடைய விவசாய நிலத்தை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். மகன்கள் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எத்திராஜிக்கும் மகன் ராமச்சந்திரனுக்கும் நிலம் தொடர்பாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.

கொலை

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை எத்திராஜ் தேவரியம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து சங்கராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியை ஓட்டி வந்த ராமச்சந்திரன் தனது தந்தை எத்திராஜ் மீது லாரியை ஏற்றியுள்ளார். இதில் எத்திராஜ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ராமச்சந்திரன் மின்னல் வேகத்தில் லாரியுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி எத்திராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பந்தமாக எத்திராஜின் மகன் ராமச்சந்திரனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

கைது

விசாரணையில் கஷ்டப்படும் அண்ணன் கண்ணனுக்கு 5 சென்ட் நிலம் கொடுக்க வேண்டும். அதற்காக நான் எழுதி கொடுத்த வீட்டு மனை 5 சென்ட் நிலத்தை திருப்பி எழுதி கொடு என்று ராமச்சந்திரனிடம் தந்தை எத்திராஜ் கேட்டுள்ளார்.

இதனால் எத்திராஜ்க்கும், ராமச்சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் தந்தை எத்திராஜை லாரியை ஏற்றி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்