திருக்கழுக்குன்றம் அருகே பாகப்பிரிவினை தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தம்பி
|திருக்கழுக்குன்றம் அருகே ஒரே வீட்டை பிரித்து கொள்வதில் நரிக்குறவ சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணனை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதம்பியை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.
ஒரே வீட்டில் சகோதரர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.தனியார் தொண்டு நிறுவனம் கட்டி கொடுத்த ஒரு வீட்டில் சகோதரர்களான வெங்கடேசன் (வயது 30), சந்திரன் (27) இருவரும் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சந்திரன் ஊசி, மணிமாலைகள், பாசிமணி மாலைகள் விற்று வந்தார்.
மேலும் துப்பாக்கி உரிமம் பெற்று கொக்கு, குருவி சுட்டு வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி வந்தார்.
கருத்து வேறுபாடு
வெங்கடேசன் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஊசிமணி, பாசிமணி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வசித்து வரும் அண்ணன்-தம்பி இருவருக்கும் வீட்டை பங்கு பிரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெங்கடேசன், தம்பி சந்திரனிடம் வீடு சிறியதாக உள்ளதால், நான், என்னுடைய மனைவி இருவர் மட்டுமே வசிப்பதற்கு சரியாக உள்ளது. நெருக்கடியாக உள்ள வீட்டில் இரு குடும்பத்தினர் வசிப்பதற்கு போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ளார்.
அண்ணன் வெங்கடேசனுக்கு வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் 2 சென்ட் நிலம், 2 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் தருவதாகவும், அங்கு தனியாக வீடு கட்டி கொள். வீட்டை நான் எடுத்து கொள்கிறேன் என்று தம்பி சந்திரன் தெரிவித்தார். அதற்கு வெங்கடேசன் சம்மதிக்கவில்லை. தற்போது உள்ள வீட்டில் தனக்கு பாகம் கொடுக்க வேண்டும், தான் தனியாக வெளியில் சென்று நீ கொடுக்கும் இடத்தில் வீடு கட்டி வசிக்க விரும்பவில்லை என்று வெங்கடேசன் கூறி தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அண்ணன்-தம்பி இடையே ஒரே வீட்டில் இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சுட்டுக்கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த சந்திரன், தூங்கி கொண்டிருந்த வெங்கடசேனை எழுப்பி எனக்குதான் இந்த வீடு சொந்தம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.
வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் வெங்கடேசன் ஒரு அறையில் தூங்க சென்றார். தூங்கியவரை எழுப்பிய சந்திரன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
பிறகு சந்திரன் வீட்டில் தயாராக மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வெங்கடேசனை குறி வைத்து சுட்டதில் அவரது தலை மற்றும் மார்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரனை கைது செய்தனர். வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சந்திரனிடம் உன்னுடைய அண்ணனை சுட்ட துப்பாக்கியை நீ எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று போலீசார் கேட்டதற்கு அதனை எடுத்து தருகிறேன் என்று வீட்டின் பின்புறம் உள்ள புதர்கள், செடி கொடிகள் உள்ள இடங்களுக்கு 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக போலீசாரை தன்னுடன் நடக்க வைத்து போக்கு காட்டினார்.
துப்பாக்கி பறிமுதல்
போலீசார் அவருடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக அலைந்து திரிந்த நிலையில் சந்திரன் தனது பக்கத்து வீட்டு அலமாரியில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் நாட்டு துப்பாக்கியுடன், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கொலை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கிடந்த வெடிமருந்து சிதறல்களை வைத்து தோட்ட ரவை மருந்து குண்டு மூலம் சுடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.