< Back
மாநில செய்திகள்
கஞ்சா வியாபாரிகளின் ரூ.8¼ கோடி   சொத்துக்கள் முடக்கம்
மதுரை
மாநில செய்திகள்

கஞ்சா வியாபாரிகளின் ரூ.8¼ கோடி சொத்துக்கள் முடக்கம்

தினத்தந்தி
|
24 July 2022 1:42 AM IST

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.8¼ கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.


மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.8¼ கோடி சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஞ்சா விற்பனை

மதுரை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அறிவுறுத்தலின்படியும், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி வழிகாட்டுதலின் படியும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களது சொத்துக்கள் மட்டுமின்றி உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுஉள்ளன. அவர்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்து அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி மதுரை ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்தில் 322 கிலோ கஞ்சா, கார், லாரி மற்றும் ஆட்டோ, சேடப்பட்டி பகுதியில் 46 கிலோ கஞ்சா, ஒத்தக்கடை போலீஸ் சரகத்தில் 170 கிலோ கஞ்சா, நாகமலை புதுக்கோட்டையில் 21 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சொத்துக்கள்

அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 559 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கஞ்சா வியாபாரிகளின் ரூ.8 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவுக்கு சென்று அங்கு கஞ்சா சாகுபடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் மூலம் கஞ்சா மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே ஆந்திராவில் பதுங்கி இருந்து கஞ்சா சாகுபடியில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்