< Back
மாநில செய்திகள்
சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைக்க உரிய அனுமதி பெற வேண்டும்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைக்க உரிய அனுமதி பெற வேண்டும்

தினத்தந்தி
|
26 Aug 2022 7:11 PM GMT

சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் எனவும், ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்காக தகுந்த முன் அனுமதியை விழாக்குழுவினர் பெற வேண்டும். விழா ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகர் சிலை அமைப்பதற்கு நில உரிமையாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சார துறையிடம் தடையின்மை சான்றுகளை பெற்று உரிய அனுமதியினை வருவாய்த்துறையிடம் பெற வேண்டும்.

பட்டாசு வெடிக்க கூடாது

சிலையானது தூய களிமண்ணால் தயாரிக்க வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளின்படி செயல்பட வேண்டும். சிலை அமைத்து வழிபாடு செய்யும் இடம் மற்றும் அதனை சுற்றி தேவையான முதலுதவி பொருட்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்கு மாற்றாக பெட்டி வடிவிலான ஒலி பெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விழா ஒருங்கிணைப்பாளர்கள் 2 தன்னார்வலர்களை நியமித்து சிலையை பாதுகாக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்ற மதத்தினரை பாதிக்கும், துன்புறுத்தும் வகையில் சத்தமாக கோஷங்களை எழுப்ப அனுமதிக்க கூடாது. மேலும் போலீசாரால் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலையை வாகனங்களில் கொண்டு சென்று கரைக்க வேண்டும். அவ்வாறு செல்லும்போது பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. விழாக்குழுவினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

700 இடங்களில் சிலைகள் வைக்க திட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சிறப்பாக கொண்டாட இந்து அமைப்பினர், பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக மாவட்டத்தில் சுமார் 700 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து நீர்நிலைகளில் கரைக்க திட்டமிட்டுள்ளனர். ஊர்வலமானது ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு நாட்களில் நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. மற்ற இடங்களில் 3, 4-ந் தேதிகளில் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளாக 80 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கறம்பக்குடி, மீமிசலில் போலீசார் கொடி அணிவகுப்பு

கறம்பக்குடி நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா 30-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கறம்பக்குடி சீனிகடை முக்கம், பஸ்நிலையம், சடையன் தெரு, கணக்கர்தெரு, யாதவர்தெரு, சுக்கிரன்விடுதி, நரங்கியப்பட்டு கள்ளர்தெரு, நரங்கியப்பட்டு யாதவர் தெரு ஆகிய 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3-ந் தேதி மாலை விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடைபெறுகிறது.

கறம்பக்குடியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் சிலை உடைப்பு, போலீஸ் தடியடி நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊர்வலம் செல்லும் வழித்தடம், சிலை அமைப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் போலீசார் மற்றும் அதிவிரைவு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்களும் அணிவகுத்து சென்றன.

இதேபோல் மீமிசலில் பொதுமக்கள் அச்சமின்றி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் மீமிசலில் தொடங்கி பஸ் நிலையம் வரை நடைபெற்றது. ஊர்வலத்தில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம், இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்