கள்ளக்குறிச்சி
முதன்மை அமர்வு உள்பட 2 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியீடு
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்மை அமர்வு உள்பட 2 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை வக்கீல்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவை இல்லாமல் இருந்தது. இதையடுத்து மேற்கண்ட கோர்ட்டுகளை அமைக்கக்கோரி வக்கீல்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அரசு வக்கீல் ராஜவேல் தலைமையில் வக்கீல்கள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டாடினார்கள். இதில் அரசு கூடுதல் வக்கீல்கள் ராமலிங்கம், அருண்குமார் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.