கள்ளக்குறிச்சி
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விரைந்து நடவடிக்கை
|போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மக்கள் குறைதீர்வு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களில் போலீஸ்நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 74 மனுக்களில் 63 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள 11 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விரைந்து நடவடிக்கை
புதிதாக 24 பேர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார். மேலும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லஷ்மண குமார், மனோஜ்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.