சேலம்
வயது, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்
|வயது, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் கிழக்கு மண்டல அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். இதில், மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் அலுவலக பணியாளர், ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுநர் புதியதாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு ஏற்கனவே வெகு தொலைவில் பணிபுரிந்து வரும் பணியாளர்களை அருகாமையில் பணியிட மாற்றம் செய்து பிறகு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்குவதில் மாவட்ட அளவில் சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்து வயது மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். பணிவரன்முறை படுத்தப்படாத பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சங்கங்களில் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் கணினி பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர் ஆகியோரை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில பொருளாளர் ஏ.சேகர், மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, இணை செயலாளர் ஆர்.ஜி.சேகர், மாவட்ட பொருளாளர் இருசப்பமுருகன் உள்பட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.