< Back
மாநில செய்திகள்
மக்களின் தேவையை அறிந்து திட்டங்கள் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மக்களின் சமூக, பொருளாதாரம் குறித்த கணக்கெடுப்பு
சென்னை
மாநில செய்திகள்

மக்களின் தேவையை அறிந்து திட்டங்கள் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மக்களின் சமூக, பொருளாதாரம் குறித்த கணக்கெடுப்பு

தினத்தந்தி
|
7 Aug 2023 11:45 AM IST

வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மக்களின் சமூக, பொருளாதார, உளவியல் நலன் கணக்கெடுக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

கணக்கெடுப்பு பணி

வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக பொருளாதார உளவியல் நலன் கணக்கெடுப்பு பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடசென்னை பகுதி மேம்பாட்டிற்காக வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக ரூ.1,000 கோடி மூன்றாண்டுகளில் செலவிடப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக - பொருளாதார உளவியல் நலன் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் கிறிஸ்தவ கல்லூரியிலிருந்து 500 மாணவிகள், 22 பேராசிரியர்கள் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியிலிருந்து 500 மாணவ, மாணவிகள் 42 பேராசிரியர்கள் இக்கணக்கெடுப்பு பணிக்காக பணியில் ஈடுபடவுள்ளனர்.

திட்டங்கள் வகுக்கப்படும்

1000 மாணவ, மாணவிகள் தலா 10 பேர் வீதம் 100 குழுக்களாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்ள உள்ளனர். வட சென்னை மக்களின் பொருளாதார முன்னேற்றம், சமூக மாற்றங்கள் மற்றும் உளவியல் ரீதியான தேவைகளை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் திட்டங்கள் வகுக்கப்படும். அதற்கு இந்த கணக்கெடுப்பு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் பொ.சங்கர், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனர்கள் எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்