சிவகங்கை
ரூ.53.91 லட்சத்தில் திட்டப்பணிகள்
|தி.சூரக்குடி ஊராட்சியில் ரூ.53.91 லட்சத்தில் திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
காரைக்குடி,
5 திட்டப்பணிகள்
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சி பகுதிகளில் அங்கன்வாடி கட்டிடம், கலையரங்கம், ரேஷன்கடை உள்ளிட்ட ரூ.53.91 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தி.சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகப்பன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அத்திட்டங்களின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அடிப்படை தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பயன்பெற வேண்டும்
இதுதவிர, மக்களின் கூடுதல் தேவைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் பெற்று பொதுமக்கள் பயன்பெற வேண்டும். அதுவே அத்திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படையானதாகும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) முத்து மாரியப்பன், மாநில தலைமை பொறுப்பு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் தென்னவன், கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், ஊர்காவலன், ஊராட்சி செயலர் பவதாரணி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.