< Back
மாநில செய்திகள்
ரூ.3 கோடியில் திட்ட பணிகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

ரூ.3 கோடியில் திட்ட பணிகள்

தினத்தந்தி
|
29 May 2023 12:15 AM IST

திருச்செங்கோட்டில் ரூ.3 கோடியில் திட்ட பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

ரூ.3 கோடி திட்ட பணிகள்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் திட்ட பணிகள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் வாழ்த்தி பேசினார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரூ.3 கோடி மதிப்பில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் சி.டி. ஸ்கேன், சீத்தாராம்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், கொக்கராயன் பேட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய வட்டார பொது சுகாதார கட்டிடம் கட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.

புதிய கட்டிடம்

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகளை ரூ.1,090 கோடி மதிப்பில் அறிவித்துள்ளார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் ரூ.23 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி, பாம்பு கடிக்கு உண்டான மருந்துகளை மக்களுக்கு பயன்படும் வகையில் தயாராக வைத்துள்ளோம். தமிழகத்தில் ராணிப்பேட்டை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கேன்சர் அதிகமாக உள்ளதாக தெரிய வருகிறது. எனவே அந்த மாவட்டங்களில் கேன்சர் பரிசோதனை பொதுமக்களிடம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திருச்செங்கோட்டில் கேன்சர் பிரிவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். விழாவில் நாமக்கல் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். இதில் மருத்துவ அலுவலர் மோகன பானு, இணை இயக்குனர் விஜயலட்சுமி, கண்காணிப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட மருத்துவத்துறையினர், அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்