விருதுநகர்
மாற்று வழித்தடத்தில் திட்ட பணியை கைவிட நடவடிக்கை
|மதுரை-தூத்துக்குடி அகல ெரயில் பாதை வழித்தடத்தினை ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை-தூத்துக்குடி அகல ெரயில் பாதை வழித்தடத்தினை ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
ரெயில்பாதை
இதுகுறித்து குலசேகரநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை-தூத்துக்குடி அகல ெரயில்பாதை திட்டப்பணிக்காக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் மாற்று பாதைக்காக எங்களது கிராமம் குலசேகரம்நல்லூர், செம்பட்டி, சவ்வாஸ் புரம் மற்றும் ஆத்திப்பட்டி விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கைவிட வேண்டும். ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாய நிலங்களையும், நீர் நிலையும் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இலவச வீட்டு மனை பட்டா
கீழ ராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான குழந்தை வேலு மற்றும் செல்வம் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், தங்களுக்கு அரசு வழங்கக்கூடிய இலவச செயற்கை கால் வழங்காமல் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் வற்புறுத்தி எங்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கால்களில் மாட்ட முடியாத அளவில் செயற்கை கால் செய்து கொடுத்துள்ள நிலையில் தற்போது பணத்தையும் திரும்பத்தர மறுக்கும் நிலை உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.திருவேங்கடபுரம் காலனி மற்றும் புலிப்பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் சமுதாயத்தினர் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு கொடுத்துள்ளனர்.
பயிர் இழப்பீடு
தமிழ் விவசாய சங்கத்தினர் கொடுத்துள்ள மனுவில் வி.முத்துலிங்காபுரம், வேப்பிலைப்பட்டி கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர் சேதமடைந்துள்ளநிலையில் அதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியுள்ளனர்.
விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்த சந்தன மாரீஸ்வரி மனுவில், விருதுநகர் நகராட்சி கடைக்கு தான் வாடகை செலுத்தியும் கடையை பூட்டியதோடு வேறு நபருக்கு விதிகளை மீறி வாடகைக்கு கொடுத்துள்ளதாக தெரிய வருவதால் தான் கட்டிய பணத்திற்கு ரசீது தந்து தனக்கு கடையை வழங்குமாறு கோரியுள்ளார்.