< Back
மாநில செய்திகள்
காரைக்குடியில் ரூ.140 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

காரைக்குடியில் ரூ.140 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள்

தினத்தந்தி
|
28 May 2023 12:15 AM IST

காரைக்குடியில் ரூ.140 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தனர்.

காரைக்குடி

காரைக்குடியில் ரூ.140 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தனர்.

தொடக்க விழா

காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நிறைவு பெற்ற பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துதுரை முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ வரவேற்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினர்.

முன்மாதிரியான மாநிலம்

நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு மக்கள் திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக திகழ்வதற்கு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் சாலை, குடிநீர், மின்சாரம் மற்றும் சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ரூ.140.13 கோடி மதிப்பீடு செய்து அதற்கான பணிகள் நிறைவு பெற்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காரைக்குடி நகராட்சி பகுதியில் சுமார் 1.39 லட்சம் மக்கள் பயன்பெற உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாதாள சாக்கடை திட்ட பணிகள்

இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய பாதாள சாக்கடை திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் காரைக்குடி நகராட்சி பகுதிக்காக ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை போன்ற நகராட்சிகளில் ரூ.30.49 கோடியில் சாலை பணிகளும், ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளும், ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்களும், ரூ.9.99 கோடி மதிப்பீட்டில் எல்.இ.டி தெருவிளக்குகளும் உள்ளிட்ட ரூ.91.56 கோடி மதிப்பீட்டில் நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்று கடந்த 2 ஆண்டுகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மொத்தம் ரூ.2507.77 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நகராட்சி துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், தி.மு.க மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜோன்ஸ்ரூசோ, மணிமுத்து உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்