திருவள்ளூர்
கொசஸ்தலை ஆற்றிலிருந்து இருந்து தண்ணீர் கொண்டுவந்து திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தை நிரப்பும் திட்டம் - சோதனை ஓட்டம் நிறைவு
|கொசஸ்தலை ஆற்றிலிருந்து இருந்து தண்ணீர் கொண்டு வந்து திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தை நிரப்பும் திட்டத்திற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
திருவள்ளூரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றாகும். பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடினால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இதற்கிடையே அண்மைக்காலமாக குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் நீர் வழித்தடம் முழுமையாக அடைபட்டுள்ளது. இதனால் நீர் வரத்து முற்றிலும் நின்றதால் வறட்சி காலங்களில் நீரின்றி கோவில் குளம் காணப்பட்டது.
கோவிலுக்கு குளக்கரையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகம் பேர் வருகின்றனர். அப்போது பக்தர்கள் குளத்தில் நீராடவும் செய்கின்றனர். எனவே குளம் முழுவதும் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூர் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் இருந்து குளத்திற்கு வழித்தடம் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பும் திட்டம் கடந்த 2015-ல் கொண்டு வரப்பட்டது. இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரை தடுக்க பட்டரைப்பெரும்புதூர் அருகே ரூ.6 கோடியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. அங்கிருந்து 13.50 கி.மீ தூரம் கோவில் வரை ராட்சத குழாய் பதிக்கும் பணிகள் நடந்து முடிந்தது. இந்த நிலையில் பட்டரைபெரும்புதூர் தடுப்பணையில் இருந்து கோவில் குளத்திற்கு நீர் கொண்டு வரும் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பட்டரைபெரும்புதூர் தடுப்பணையில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் கோவில் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்றது. நீரேற்றம் செய்யும் போது வால்வுகள் சரியாக உள்ளனவா, நீர் கசிவு இருக்கிறதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.