< Back
மாநில செய்திகள்
வங்கிகளை வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

வங்கிகளை வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்

தினத்தந்தி
|
2 Nov 2022 1:27 AM IST

வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.

வங்கி சேவைகள்

பணப்பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கி சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கி சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கி கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.

இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றவாறு வங்கி சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள் தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மை படுத்தப்படுகின்றன.

வாரத்துக்கு 5 நாட்கள்

என்ன தான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுக வேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய நிலை உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகி இருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது.

விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும்வருமாறு:-

90 சதவீதம் ஆன்லைன்

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேங்கடசுப்பிரமணியம்:-

இது எங்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். எப்போது கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம். வெளியில் இருந்து பார்க்கும்போது வங்கி ஊழியர்களுக்கு சனிக்கிழமையும் விடுமுறையா என்று நினைக்க தோன்றும். ஆனால் அந்த நாள் இழப்பை ஈடுகட்டும் வகையில் மற்ற நாட்களில் வேலை நேரத்தை அதிகரிக்க உள்ளனர்.

அதன்படி ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் வங்கி வேலை நேரம் அதிகரிக்கப்படும். தற்போது 90 சதவீத வங்கி சேவைகள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டு விட்டன. எனவே இனிவரும் காலங்களில் வங்கி சேவைகளை நேரடியாக வந்து பெறுவது என்பது குறைவாகவே இருக்கும்.

டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை

வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மூத்த துணை தலைவர் பெரியசாமி:-

ரிசர்வ் வங்கி வங்கிகளின் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்க முடிவு செய்து இருப்பதாக அறிகிறோம். சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை, பெரிய நிறுவனங்கள் தவிர, வங்கிகளை நம்பி இருக்கும் சிறு, குறு நிறுவனங்களை பெரிதும் சிரமத்திற்கு உள்ளாக்கும். அன்றாட தினக்கூலி ஆட்களுக்கு வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் பணம் பட்டுவாடா செய்யும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வாறு தொழிலாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். கூலி ஆட்கள் இன்னும் டிஜிட்டல் முறைக்கு மாற வில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவசர தேவைக்கு வணிகர்கள் பணம் பட்டுவாடா செய்து சரக்குகளை வாங்குகிறார்கள். 2 நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை என்றால், சரக்குகள் டெலிவரி ஆவதில் தாமதம் ஏற்பட்டு, பொருட்கள் வியாபாரம் பாதிக்கப்படும். தினசரி வங்கிகளில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது போன்ற பழக்கம் இன்னும் மக்களிடம் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வங்கிகளுக்கும், நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

6 நாட்கள்

வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கதலைவர் சுந்தரம்:-

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்கள் என ரிசர்வ் வங்கி எடுக்க உள்ள முடிவு வணிக நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும். பொருட்களை கொள்முதல் செய்ய வெளி மாநிலங்களில் அட்வான்ஸ் தொகை அனுப்பி இருந்தால், வாகனங்களில் சரக்கு வந்து சேரும் போது பொதுவாக வாரத்தில் இறுதி நாளான சனிக்கிழமை அன்று வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய இயலாமல் போகும். குறித்த நேரத்தில் பொருட்கள் வந்து சேராமல் போகும்.

அடிக்கடி விலையில் மாற்றம் ஏற்படுவதால் பொருட்கள் கைக்கு வந்து சேரும் முன்பு விலைகளில் மாறுதல் ஏற்பட்டால் விற்பனையில் இழப்பு ஏற்படும். பொதுவாக வணிகர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் செயல்பட வேண்டும். 5 நாட்கள் வங்கிகளுக்கு வேலை நாட்கள் என்பது சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதால் வணிகர்கள் மிகுந்த சிரமம் அடைய அதிக வாய்ப்புக்கு இடமாகும். இன்றைய பொருளாதார சிரமத்தில் வணிகர்கள் சிரமப்படாமல் தொழில் செய்ய வங்கிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்பட வேண்டும்.

இதுவே சிறந்தது

பீச்சபாளையம் தனியார் பள்ளி ஆசிரியை ஜெயந்தி:-

வாரத்தில் 5 நாட்கள் வங்கிகளை இயக்கும் திட்டம் தனியார் நிறுவனங்களை முழுமையாக பாதிக்கும். வாரத்தில் ஒருநாள் விடுமுறைக்கே ஏ.டி.எம். மையங்களில் பணம் இருப்பது இல்லை. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறை என்றால் ஏ.டி.எம். மையங்களில் அதிக பண தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவார்கள்.

வங்கிகளில் நேரடி பணபரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களின் பணத் தேவைகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் முடங்கி விடும். ஏற்கனவே அமலில் இருக்கும் வேலை நாட்களும், விடுமுறை நாட்களும் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். இதுவே சிறந்தது ஆகும்.

பணம் செலுத்தும் எந்திரம்

திருச்செங்கோட்டை சேர்ந்த பட்டறை உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் முகமது ரபி:-

சனி, ஞாயிறு என 2 நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால், எங்களை போன்ற வியாபாரிகளுக்கு மிகுந்த சிரமம் உண்டாகும். ஏனென்றால் நாங்கள் வாங்கும் பொருட்களுக்கு கம்பெனிகளுக்கு கட்ட வேண்டிய பணத்தை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செலுத்த இயலாமல் போய்விடும். பொதுவாக சனிக்கிழமை தான் மற்ற நாட்களை விட வியாபாரம் அதிக அளவில் இருக்கும். மேலும் சனி, ஞாயிறு 2 நாட்கள் பணம் செலுத்தும் எந்திரம் (கேஷ் டெபாசிட் மிஷின்களில்) பணம் செலுத்தி சென்றாலும், அது நிரம்பி பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். இந்த பிரச்சினைகளை தீர்க்க அனைத்து வங்கிகளும் தங்களது கிளை அலுவலகங்களின் முன்பு கேஷ் டெபாசிட் மிஷின்களையும் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளிலும் கிராமங்களின் முக்கிய பகுதிகளிலும் பணம் செலுத்தும் எந்திரங்களை அதிக அளவில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்