< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் -வைகோ பேட்டி
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் -வைகோ பேட்டி

தினத்தந்தி
|
14 July 2023 12:38 AM IST

தமிழ்நாட்டில் மது விற்பனையை கூட்டுவது ஏற்புடையதல்ல. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 2 நாட்களுக்கு முன்பு என்னை செல்போனில் அழைத்து, இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். நான் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளேன்.

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அம்மாநில சட்டமன்றத்தில், 'மேகதாது அணை கண்டிப்பாக கட்டுவோம். அதற்கு பணம் ஒதுக்கி விட்டோம்' என்று கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள், முயற்சிகள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.

முழு மதுவிலக்கு வேண்டும்

தி.மு.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஏற்படுத்தவும் முடியாது. பா.ஜ.க. தலைகீழாக நின்றாலும், எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாது. அவர்கள் யாரை கூட்டு சேர்த்தாலும் வெற்றி பெற முடியாது. இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் சூழல்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. இதற்காக நான் 3 நடைபயணங்கள் மேற்கொண்டிருக்கிறேன். எனது கிராமத்தில் இருந்த மதுக்கடையை அகற்றினோம். மது விற்பனையை கூட்டுவது என்பது ஏற்புடையதல்ல. மது விற்பனை குறைக்கப்பட்டு படிப்படியாக கடைகளை மூட வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடகாவுக்கு செல்லும்போது மேகதாது அணை விவகாரம் குறித்து அம்மாநில மந்திரிகளை சந்தித்து வலியுறுத்துவீர்களா? என்று வைகோவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, 'பொது பிரச்சினைக்காக எதிர்க்கட்சிகள் கூடுகிறது. இது (மேகதாது) 2 மாநிலங்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சினை. எனவே இது பற்றி அங்கு பேசுவதற்கு வாய்ப்பு இல்லை' என்று பதில் அளித்தார். நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவாரா? என்று கேட்டதற்கு, 'இந்த கேள்விக்கே இப்போது இடமில்லை' என்று வைகோ கூறினார்.

மதுரையில் மாநாடு

முன்னதாக ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, டாக்டர் ரொகையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவை வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அன்று மதுரையில் திறந்தவெளி மாநாடாக நடத்துவது, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், தமிழ்நாட்டில் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிடவேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்