தேனி
ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல தடை:வனத்துறையினருடன், பொதுமக்கள் வாக்குவாதம்
|வருசநாடு அருகே ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்ததால் வனத்துறையினருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மஞ்சனூத்து, இந்திராநகர், அரசரடி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மாதத்தில் 2 முறை ரேஷன் கடை பணியாளர்கள் லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வினியோகம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று மலைக் கிராமங்களுக்கு லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றி செல்லப்பட்டது.
அப்போது மஞ்சனூத்து சோதனை சாவடியில் லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் வனத்துறையினர் உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி மலைக் கிராமங்களுக்கு செல்லக்கூடாது என ரேஷன் கடை பணியாளர்களிடம் தெரிவித்தனர். இதையறிந்த மஞ்சனூத்து, ஒட்டுக்கல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மஞ்சனூத்து சோதனை சாவடிக்கு வந்து வனத்துறை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேகமலை வனச்சரகர் அஜய், லாரியை மலை கிராமங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினார். மேலும் இனி முறையான அனுமதி பெற்றால் மட்டுமே ரேஷன் பொருட்கள் கொண்டு வரும் லாரி மலைக்கிராமங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறினார்.