பி.எப்.ஐ அமைப்பிற்கு தடை: தமிழக அரசு அரசாணை வெளியீடு
|தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடைவிதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.
இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது. இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இதனை தொடரந்து, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. அந்த வகையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் முழு உஷார் நிலையில் இருக்கவும், சென்னையில் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பிஎப்ஐ அமைப்பை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை வெளியிட்டுள்ளது.