< Back
மாநில செய்திகள்
வீடுகளில் வளர்க்க தடை:600 கிளிகளை ஒப்படைத்த உரிமையாளர்கள்- வனத்துறை அதிகாரிகள் தகவல்
மதுரை
மாநில செய்திகள்

வீடுகளில் வளர்க்க தடை:600 கிளிகளை ஒப்படைத்த உரிமையாளர்கள்- வனத்துறை அதிகாரிகள் தகவல்

தினத்தந்தி
|
18 July 2023 3:34 AM IST

வீடுகளில் வளர்க்க தடை விதித்தால் 600 கிளிகளை உரிமையாளர்கள் ஒப்படைத்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்த சட்டம் 2022-ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக தமிழ்நாடு வனத்துறை அறிவித்துள்ளது. இதனால், அவைகளை வீட்டில் வைத்திருப்பதும், வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் மதுரையில் வீடுகளில் கிளிகள் வளர்க்க கூடாது என்பது குறித்து பொதுமக்களிடம் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வனத்துறையினர் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கிளிகள் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தினர். வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை 17-ந் தேதிக்குள் (அதாவது நேற்று) ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த கிளிகளை அதன் உரிமையாளர்கள் ஒப்படைத்து வந்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் கடந்த 6-ந்தேதியில் இருந்து வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்காரணமாக சுமார் 600-க்கும் மேற்பட்ட கிளிகள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை ஒப்படைப்பதற்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, வீடுகளில் கிளிகள் வளர்த்தால் அதனை உடனடியாக வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காமல் விதிமீறி, அனுமதியின்றி கிளிகள் வளர்க்கும் நபர்கள் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்