இயக்குனர் ஷங்கர் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவு
|‘எந்திரன்’ படக்கதை விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர்கள் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'எந்திரன்'. இந்த திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஷங்கர் கதை எழுதி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று பலர் உரிமை கோரினர்.
அதில், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 'எந்திரன்' திரைப்பட கதை தன்னுடையது. ஜூகிபா என்ற தலைப்பில் தான் எழுதிய நாவல் கதையை ஷங்கர் திருடியுள்ளார் என்று கடந்த 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவான குற்ற வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
ரத்து செய்ய வேண்டும்
இதற்கிடையில் 'எந்திரன்' படத்தின் கதைக்காக இயக்குனர் ஷங்கரிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் 2010-ம் ஆண்டு ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் டி.சாய்குமரன் ஆஜராகி, கதை உரிமை தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. எனவே, எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
தடை
அதையடுத்து, இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் ஆரூர் தமிழ்நாடன் பதில் அளிக்க வேண்டும். எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.