அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
|அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், தற்போது தி.மு.க., அரசில் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார். இவர் வீட்டு வசதி அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இவர்களுக்கு சொந்தமான ரூ.6.50 கோடி மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
அவகாசம் வேண்டும்
இதை எதிர்த்தும், தன் மீது அமலாக்கப்பிரிவு பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.வி.கார்த்திக்கேயன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தடையை நீக்கக்கோரி அமலாக்கப்பிரிவு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
தடை நீட்டிப்பு
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர், விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.