நீலகிரி
கார் மோதி பேராசிரியர் பலி
|ஊட்டியில் கார் மோதி பேராசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்
ஊட்டி
ஊட்டியில் கார் மோதி பேராசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்லூரி பேராசிரியர்
ஊட்டியில் உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 45). இவர் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுமந்தா. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் செல்வகுமார் நேற்று காலையில் வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் மதியம் ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
பழைய தபால் நிலையம் அருகே சென்றபோது எதிரே கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று வேகமாக வந்தது. இதை பார்த்ததும் சாலையோரம் மொபட்டை நிறுத்த முயன்றார்.
மாணவர் கைது
ஆனால் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து சாலையில் தவறி விழுந்தார். அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்தினி தலைமையிலான போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சனூஜ் என்பவரை கைது செய்தனர்.