< Back
மாநில செய்திகள்
மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

குமரியில் நடந்த மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி சுகிர்தா (வயது 27) கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரத்தில் மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் பரமசிவன் (63), சீனியர் மாணவர் ஹரீஷ் மற்றும் சீனியர் மாணவி பிரீத்தி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையை தொடர்ந்து பேராசிரியர் பரமசிவனை நேற்று இரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்த இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் ரீதியாக அவர் தொந்தரவு கொடுத்ததாக மாணவி கடிதத்தில் எழுதியுள்ளார். அதன்பேரில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தேசிய மருத்துவ ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரிக்கும், தமிழக மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்