நெல்லையில் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர் கைது
|வழக்கில் தொடர்புடைய மற்றொரு பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை மாநகர பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் இரண்டு பேர் சம்பவத்தன்று இரவு, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு கால் செய்துள்ளனர். அப்போது, அந்த கல்லூரி மாணவியிடம், 2 ஆசிரியர்களும் விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மது குடிப்பதற்கும் அழைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் எடுத்துரைத்துள்ளார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளை போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், பேராசிரியர்களான பால்ராஜ் மற்றும் ஜெபஸ்டின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஜெபஸ்டின் என்ற பேராசிரியரை போலீசார் கைதுசெய்துள்ளனர். பால்ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.