திருநெல்வேலி
பாலிடெக்னிக் மாணவரை தாக்கிய பேராசிரியர் கைது
|வடக்கன்குளம் அருகே பாலிடெக்னிக் மாணவரை தாக்கிய பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே பெத்தரங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ஆனந்த் (வயது 40). இவர் வடக்கன்குளம்- அழகனேரி சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவர் ஒருவர் சரியாக படிக்காமலும், நோட்டுப்புத்தகத்தில் பாடத்தை எழுதாமலும் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த மாணவரிடம் நோட்டுப்புத்தகத்தை பேராசிரியர் ஆனந்த் கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவர் நோட்டுப்புத்தகத்தை கொண்டு வரவில்லை என்று கூறியுள்ளார்.
உடனே, அந்த மாணவரின் கையில் பேராசிரியர் ஆனந்த் பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவரின் கையில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் மாணவர் வீட்டுக்கு சென்றதும், அவரது கையில் வீக்கம் ஏற்பட்டதை பார்த்த தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் ஆனந்தை கைது செய்தனர். பின்னர் அவரை ராதாபுரம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர்.