முப்படைகளை நவீனப்படுத்த ரூ.76,390 கோடிக்கு கொள்முதல் திட்டங்கள் - மத்திய அரசு அறிவிப்பு
|முப்படைகளையும் நவீனப்படுத்த 76,390 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கொள்முதல் திட்டங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல் படை ஆகிய முப்படைகளையும் நவீனப்படுத்த 76,390 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கொள்முதல் திட்டங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 அதிநவீன கார்வெட் (Corvette) ரக போர் கப்பல்களை இந்தியாவில் வடிவமைத்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை நீர்மூழ்கி எதிர்ப்புத்திறன், தரை போர்த்திறன் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு போர்த்திறன் கொண்டவையாக உருவாக்கப்பட உள்ளன.
பீரங்கி டாங்கர்களை தகர்க்கும் ஏவுகணைகளைக் கொண்ட கவச வாகனங்கள், பீரங்கிகளை கண்டறியும் திறன் கொண்ட ராடார்கள், பாலங்களை அமைக்க உதவும் டாங்க்குகள் ஆகியவை இந்திய ராணுவத்திற்கு கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன.
பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் மூலம் டோர்னியர் ரக விமானங்கள் மற்றும் சுகாய் போர் விமான எஞ்சின்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடலோர காவல்படையின் செயல்பாடுகளை இந்திய அளவில் ஒருங்கிணைக்க, ஒரு டிஜிட்டல் வலைப்பின்னல் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.