அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அரசாணை வெளியீடு
|அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் புகழ் பெற்றது ஆகும்.
இந்த போட்டிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி எப்போது நடத்தப்படும்? என்று மாடுபிடி வீரர்களும், காளைகளை வளர்ப்பவர்களும் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருந்தனர். இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் மதுரை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் 15-ந் தேதி (இன்று), வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடில் 16-ந் தேதி (நாளை), அலங்காநல்லூரில் (17-ந் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச்செயலாளர் ஏ.கார்த்திக் பிறப்பித்துள்ளார்.