தர்மபுரி
வள்ளலார் படத்துடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள்
|ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி வள்ளலார் படத்துடன் பக்தர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.
தர்மபுரி:
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி வள்ளலார் படத்துடன் பக்தர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.
நிலம் ஆக்கிரமிப்பு
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 461 கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
இந்த கூட்டத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் வள்ளலார் படத்துடன் ஊர்வலமாக வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் பிக்கம்பட்டியில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நடத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். எங்கள் அமைப்பின் பயன்பாட்டிற்காக ஒருவர் பிக்கம்பட்டியில் நிலம் வழங்கினார். அந்த நிலத்தை 2 பேர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கொடுத்த கோரிக்கை மனுவில், 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக இருந்து நிதி செலுத்தி வருகிறோம். குழுவைச் சேர்ந்த ஒருவர் செங்கல் சூளை அமைப்பதற்கு முதலீடு செய்ய பணம் கேட்டதால் இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களான நாங்கள் குழுவில் இருந்த தொகையில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தோம். ஆனால் இப்போது அந்த பணத்தை செலுத்த மறுப்பு தெரிவித்து மிரட்டல் விடுகிறார்கள்.
எனவே எங்களுடைய பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.