< Back
மாநில செய்திகள்
திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
3 April 2023 12:18 AM IST

புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கையான திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.32 கோடியில் நிலம் எடுப்பு பணி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

திருவப்பூர் ரெயில்வே கேட்

புதுக்கோட்டை நகரில் திருச்சி-காரைக்குடி ரெயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ளது திருவப்பூர் ரெயில்வே கேட். மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே சற்று தூரத்தில் இந்த ரெயில்வே கேட் அமைந்துள்ளது. புதுக்கோட்டை நகருக்குள் நுழைவது, வெளியே செல்ல பிரதான சாலையில் இந்த ரெயில்வே கேட் அமைந்துள்ளதால் போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படும். ரெயில்கள் வரும்போது சாலையின் இருபுறமும் கேட் மூடப்படும்.

அப்போது கட்டியாவயலில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வரும் வாகனங்கள், திருவப்பூரில் இருந்து திருக்கோகா்ணம் நோக்கி செல்லும் வாகனங்கள், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து கட்டியாவயல் செல்லும் வாகனங்கள், திருக்கோகர்ணத்தில் இருந்து திருவப்பூர் வரும் வாகனங்கள், திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே உள்ள மற்றொரு சாலையில் வரும் வாகனங்கள் என 5 மார்க்க சாலைகளில் இருந்து வாகனங்கள் இந்த கேட்டில் சந்திக்கும். கேட் மூடப்படுகிற நேரத்தில் சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும். இதில் அந்த நேரத்தில் ஆம்புலன்சுகள் வந்தாலும் சிக்கிக்கொள்ளும். அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

பொதுமக்கள் கோரிக்கை

ரெயில் கடந்து சென்ற பின் கேட் திறக்கப்படும் போது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒருவருக்கொருவர் முந்தி செல்லும் போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கி மெதுவாக கடந்து செல்லும். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ரெயில்வே கேட் மூடப்படுகிற நேரத்தில் மக்கள் படுகிற அவஸ்தை அதிகம். இதனால் திருவப்பூர் ரெயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதேபோல் அரசியல் கட்சியினரும், பல்வேறு தன்னார்வ அமைப்பினரும் கோரிக்கையை முன்னெடுத்து பல இயக்கங்கள், போராட்டங்களை நடத்தி உள்ளனர். மக்கள் பிரதிநிதிகளும் தேர்தல் நேரத்தில் திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதியாக அளித்தபடி வந்துள்ளனர். பொதுமக்கள் கோரிக்கை தொடா்பாக 'தினத்தந்தி' நாளிதழிலும் செய்திகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 3-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில், திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவது எப்போது? என்ற செய்தி பொதுமக்கள் கருத்துடன் பிரசுரமாகியிருந்தது.

ரூ.32 கோடியில் நிலம் எடுப்பு பணி

இந்த நிலையில் திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவப்பூரில் மேம்பாலம் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். மேலும் ரூ.32 கோடியில் நிலம் எடுப்பு பணி மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதுக்கோட்டை மக்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது.

அரசியல் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

ஓம் ராஜ்:- திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. அதனை நிறைவேற்றும் வகையில் மேம்பாலம் அமைக்க நிலம் எடுப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கி உள்ளது வரவேற்கத்தக்கது. திருவப்பூர் ரெயில்வே கேட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் போது வாகனங்கள் அனைத்தும் எளிதில் சென்று வர முடியும். ரெயில் வருகிற நேரத்தில் கேட் மூடப்படும் போது வாகனங்கள் மேம்பாலம் வழியாக எளிதில் சென்று வரும். இதனால் போக்குவரத்து பாதிப்படையாது. பொதுமக்களும் வாகனங்களை சிரமமின்றி ஓட்டி செல்ல முடியும். போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியும். மருத்துவ சிகிச்சைக்காக செல்பவர்கள் சிரமம் இல்லாமல் வாகனங்களில் செல்ல முடியும். ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் சென்று வரும்.

மன உளைச்சல்

சரண்யா:- இந்த ரெயில்வே கேட்டில் காலை நேரத்தில் தான் அதிகம் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. பள்ளிக்கு குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்பவர்கள், பணி நிமித்தமாக வாகனங்களில் செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக செல்ல முடியவில்லை. வேலைக்கு செல்பவர்கள் பெரும் பாதிப்படைகின்றனர். காலையிலே ஒருவித டென்ஷன் ஏற்படுகிறது. மாலை நேரத்தில் திரும்பி வருகிற போதும் இதே நிலை தான் காணப்படும். ஆனால் வேலை முடிந்து வருகிற போது இதனை கொஞ்சம் பொறுத்து கொள்ள முடியும். ஆனால் காலை நேரம் தான் அதிகம் மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். அதனால் இந்த கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் போது பொதுமக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேம்பாலம் எப்படி அமைய உள்ளதோ?

கார்த்திக்:- இந்த ரெயில்வே கேட் வழியாக தினமும் 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்கின்றன. நாளுக்கு நாள் ரெயில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. பிரதான சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படும் போது போக்குவரத்து அதிகம் பாதிக்கப்படுகிறது. தற்போது மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கி உள்ளனர். இந்த மேம்பாலம் எப்படி அமைய உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் மேம்பாலம் எப்படி அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் மேம்பாலம் பற்றி அரசு தரப்பில் இருந்து முழுமையாக அறிவித்த பின்பு தான் தெரியவரும். இந்த பகுதியில் வணிக நிறுவனங்கள், கடைகள் இருந்தாலும் மேம்பாலம் என்பது அத்தியாவசியமானது தான். அதனால் மேம்பாலம் அமைப்பதை வரவேற்கத்தான் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரெயில்வே துறை தயார்

இந்த நிலையில் திருவப்பூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகமும் ஒப்புதல் வழங்கி விட்டது. ரெயில்வே இடத்தில் பாலப்பணி மேற்கொள்வதற்காக ரெயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது. தமிழக அரசு மேம்பால பணிகளை தொடங்கும் போது, ரெயில்வே நிர்வாகமும் பணியை தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாகும். இந்த மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை அடுத்தக்கட்டமாக விரைந்து தொடங்கி நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்