விருதுநகர்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருச்சுழி,
இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விருதுநகர் நேரு யுவகேந்திரா சார்பில் கிராம, ஒன்றிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் திருச்சுழியில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஞானசந்திரன் மற்றும் முன்னாள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கம்பாளி ராமலிங்கம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த கபடி போட்டியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு தங்களது திறமைகளைவெளிப்படுத்தினர். இதில் செம்பொன்நெறுஞ்சி எஸ்.பி.என். அணியினர் முதல் பரிசையும், உலகத்தேவன்பட்டி அணியினர் 2-வது பரிசையும் வென்றனர். இதேபோன்று வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற சாமிநத்தம் அணியினர் முதல் பரிசும், செம்பொன்நெறுஞ்சி அணியினர் 2-வது பரிசும் பெற்றனர். மேலும் தொடர்ந்து நடைபெற்ற கோகோ போட்டியில் கம்பாளி ஏ.எஸ்.கே அணியினர் முதல் பரிசும், கம்பாளி சோணைக்கருப்பு அணியினர் 2-வது பரிசும் வென்றனர். இதனைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சுழி போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ராமநாதன் ஆகியோர் பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். போட்டிகளுக்கு விளையாட்டு ஆசிரியர்களான ஆறுமுகம், இருளப்பன், பாண்டி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர்கள் முத்து, மணியரசன், மணிகண்டன், ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.