சென்னை
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மாவட்ட தேர்தல் அதிகாரி வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிர் ஆகியோருக்கு தேர்தல் குறித்த பாட்டு போட்டி, ரங்கோலி போட்டி, சுவரொட்டி தயாரிப்பு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிர் ஆகியோரை சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷூ மஹாஜன், மாவட்ட வருவாய் அதிகாரி (தேர்தல்கள்) ஜி.குலாம் ஜீலானி பாபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.