திண்டுக்கல்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் இ.பெரியசாமி பரிசு வழங்கினார்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது. தடகளம், கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, கபடி, ஆக்கி என 42 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 10 ஆயிரத்து 531 பேர் பங்கேற்று விளையாடினர்.
இதையொட்டி முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கும் விழா திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். இதில் போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், 2, 3-வது இடம் பிடித்தவர்களுக்கு முறையே ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.1, 000 வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதோடு, விளையாட்டு துறையிலும் சாதனை படைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் விளையாட்டு துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் கோப்பைக்கான பரிசுத்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் காந்திராஜன், இ.பெ.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கால்பந்து கழக செயலாளர் சண்முகம், ஆக்கி சங்க தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.