பெரம்பலூர்
வாலிபால் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு
|மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரி, கிளப் அணிகள் என மொத்தம் 42 அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடந்தது. ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் முதலிடத்தை சு.ஆடுதுறை எவரெஸ்ட் அணியும், 2-வது இடத்தை தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும அணியும், 3-வது இடத்தை கொளக்காநத்தம் டி.ஜி.பி. அணியும் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் முதலிடத்தை தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை-அறிவியல் கல்லூரி அணியும், 2-வது இடத்தை சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், 3-வது இடத்தை ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் பிடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.8 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் மற்றும் சுழற் கோப்பைகளும், வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த அணிகள் மண்டல அளவிலான போட்டியில் விளையாடவுள்ளனர்.