மயிலாடுதுறை
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
|குறுவட்ட தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணைய ராஜூவ்காந்தி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட குறுவட்ட தடகள போட்டிகளை மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சிமூர்த்தி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் சீதாலெட்சுமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறுவட்ட செயலர் மஞ்சுளா வரவேற்றார்.இதில், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 100, 200, 400, 1500 மற்றும் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 14 வயதுக்கு உள்பட்டோர், 17 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட இப்போட்டிகளில் மயிலாடுதுறை வட்டத்துக்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதில், குறுவட்ட இணை செயலர் அருண்பாபு மற்றும் அனைத்துப் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.