< Back
மாநில செய்திகள்
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

ராமநாதபுரத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர்.

கருணாநிதி நூற்றாண்டு விழா

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், சி.வி.கணேசன், கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், நில நிர்வாக ஆணையர் வெங்கடாசலம், கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் வறுமை குறைந்துள்ளது. பெண்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளது. மகளிர் உரிமை திட்டம் மூலம் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ தொடங்கியுள்ளனர். அவர்களுடைய பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றார்.

இலவச மின்சாரம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பேசியதாவது:- கருணாநிதி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் என்றார். அமைச்சர் மெய்யநாதன் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் கல்வி பொருளாதார உயர்வுக்கு வழி வகுத்தவர் கருணாநிதி. அவரது இலவச மின்சார திட்டத்தால் உணவு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 187 நாடுகள், 2000 வீரர்கள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நடத்தியதால் உலக நாடுகளே வியக்கும் வகையில் தமிழ்நாட்டை தலை நிமிர செய்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.

பெண்களுக்கான திட்டம்

அமைச்சர் சி.வி.கணேசன் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- கருணாநிதி ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரம் உயர பல திட்டங்களை செயல்படுத்தியவர். தொழுநோயாளிகள் மறுவாழ்வு திட்டம், குடிசை மாற்று வாரியம் என பல திட்டங்களை தந்தவர். அவரது வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினர். நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பரிசுகள்

பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ராம.கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணைதலைவர் வேலுச்சாமி, யூனியன் தலைவர்கள் மண்டபம் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி புல்லாணி, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைதலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்