திருநெல்வேலி
10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
|நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கினார்.
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவில் தேர் திருவிழாவின் 8-ம் நாள் நாடார் மண்டகப்படி நடந்தது. இதனை முன்னிட்டு நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ராமச்சந்திரன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு, நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சபாநாயர் அப்பாவு சால்வை அணிவித்து பரிசுகள், கேடயம் வழங்கி பாராட்டினார். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார் (தென்காசி), ரூபிமனோகரன் (நாங்குநேரி), அசோகன் (சிவகாசி), மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், தட்சிணமாற நாடார் சங்க பொருளாளர் செல்வராஜ் நாடார், நாடார் மகாஜன சங்க அச்சக செயலாளர் மகா கிப்சன், நாடார் கத்தோலிக்க பாளையங்கோட்டை மறைமாவட்ட தலைவர் மரியஜான், நெல்லை நாடார் சங்க கவுரவ ஆலோசகர் டாக்டர் பிரேமச்சந்திரன், நாடார் மகாஜன சங்க நெல்லை மண்டல தலைவர் மதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர். முன்னதாக திரைப்பட மெல்லிசை கச்சேரி நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.