< Back
மாநில செய்திகள்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு
அரியலூர்
மாநில செய்திகள்

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு

தினத்தந்தி
|
20 Jun 2023 12:19 AM IST

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

பரிசளிப்பு விழா

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனிதா நினைவு அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட தனி நபர், இரட்டையர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் முதல் இடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும் தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும் தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் தலா ரூபாய் ஆயிரமும் என மொத்தம் ரூ.41 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகையினையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

விளையாட்டு வீரர்களுக்கு...

விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 362 வீரர்கள், 350 வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் அரசு செலவில் பங்கேற்கவுள்ளனர். விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திய ஆக்கி வீரர் கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று அவரது குடும்பம் குடியிருப்பதற்காக வீட்டிற்கான ஆணையை, முதல்-அமைச்சர் அவரது இல்லத்திற்கே நேரடியாக சென்று வழங்கினார்.

இதேபோல் உடையார்பாளையத்தை சேர்ந்த சிறுமி சர்வாணிகா சதுரங்க போட்டியில் உலக அளவில் வெற்றி பெற்றதற்காக அச்சிறுமியை நேரில் அழைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு உரிய முறையில் நிறைவேற்றி தரும், என்றார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்