கள்ளக்குறிச்சி
போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
|கள்ளக்குறிச்சியில் போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பரிசு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் படித்து போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் படித்த போட்டி தேர்வர்கள் 10 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட (2022-2023) -ம் ஆண்டு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பழங்குடியினர் பிரிவில் தமிழக அளவில் வெங்கட்ராமன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் 7 பேர் தாள்-II ல் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வெற்றிபெற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சேலம் மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) லதா, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் செங்கதிர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.