< Back
மாநில செய்திகள்
தமிழில் வெளியான சிறந்த நூல்களுக்கு பரிசு: 33 பிரிவுகளின் கீழ் போட்டி - தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு
மாநில செய்திகள்

தமிழில் வெளியான சிறந்த நூல்களுக்கு பரிசு: 33 பிரிவுகளின் கீழ் போட்டி - தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

தினத்தந்தி
|
29 April 2023 9:48 PM IST

சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கும் போட்டி தொடர்பான அறிவிப்பை தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"2022-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 பிரிவுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்நூலை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட உள்ளது.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்), அகராதி கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும்.

இத்துறையின் வலைதளம் மூலமாக (www.tamilvalarchithurai.tn.gov.in) போட்டிக்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100-ம் "தமிழ் வளர்ச்சி இயக்குனர், சென்னை" என்ற பெயரில் வங்கி கேட்புக் காசோலையாக அளிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30-ந் தேதிக்குள் "தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், எழும்பூர்" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் விவரங்களுக்கு 044-28190412, 28190413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்