பெரம்பலூர்
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தனியார் வாகனங்கள் பறிமுதல்
|பெரம்பலூரில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தனியார் வாகனங்களை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
சோதனை
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரின் உத்தரவுபடி, பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) பிரபாகரன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) ராஜாமணி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பெரம்பலூர் பகுதிகளில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான கார் மற்றும் வேன்களில் குழந்தைகளை பள்ளிக்கு மாத வாடகைக்கு அழைத்து சென்று வந்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தகுதி சான்று புதுப்பிக்கப்படாத பயணிகள் வேன்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றி வருவது கண்டறியப்பட்டு, அந்த 3 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல்
மேலும் இது தவிர தகுதி சான்று புதுப்பிக்கப்படாத லாரியும், வரி செலுத்தாத சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் கூறுகையில், தனியாருக்கு சொந்தமான வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி இயக்குவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது, சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது. இது சம்பந்தமாக தினசரி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.