< Back
மாநில செய்திகள்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தினத்தந்தி
|
28 Sept 2023 1:48 AM IST

கும்பகோணத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அடுத்தமாதம் (அக்டோபர்) 7-ந் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட உள்ளது.இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள், நர்சிங், பி.இ. கல்வி தகுதிகளுக்குரிய வேலைதேடுவோருக்கு 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை அளிக்க உள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும், சுயதொழில் தொடங்குவதற்குரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைதேடுபவர்கள் தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்