< Back
மாநில செய்திகள்
கட்டிட வரன்முறை பெறாத தனியார் பள்ளிகள்: உரிய அமைப்புகளிடம் அனுமதி பெற்றால் ஓராண்டுக்கு தொடர் அங்கீகாரம் - கல்வித்துறை அனுமதி
மாநில செய்திகள்

கட்டிட வரன்முறை பெறாத தனியார் பள்ளிகள்: உரிய அமைப்புகளிடம் அனுமதி பெற்றால் ஓராண்டுக்கு தொடர் அங்கீகாரம் - கல்வித்துறை அனுமதி

தினத்தந்தி
|
12 Aug 2022 6:27 AM IST

கட்டிட வரன்முறை பெறாத 729 தனியார் பள்ளிகள் உரிய அமைப்புகளிடம் அனுமதி பெற்றால் ஓராண்டுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இணைய வழியாக கட்டிட வரன்முறைக்கு பள்ளி நிர்வாகங்களாக விண்ணப்பிக்க இயலாதநிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக் கட்டிட வரன்முறைக்கு விண்ணப்பித்த 811 பள்ளிகளில் 82 பள்ளிகளுக்கு மட்டுமே ஆணை வழங்கப்பட்டதாகவும், அதில் 729 பள்ளிகளுக்கு இன்னமும் உரிய ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தனியார் பள்ளிகள் சங்கத்தால் கோர்ட்டில் வழங்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகங்கள் பள்ளி கட்டிட வரன்முறைக்கு நகர் மற்றும் ஊரமைப்பு துறை, உள்ளூர் திட்டக்குழுமம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 6 மாத காலத்துக்குள் விண்ணப்பித்து அதற்கான ஆவண நகலை உரிய அலுவலரிடம் சமர்ப்பித்தால் 1.6.2022 முதல் 31.5.2023 வரையிலான ஓராண்டுக்கு அப்பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கி ஆணை வழங்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.

அவரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்து, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை, உள்ளூர் திட்டக்குழுமம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் போன்ற உரிய அமைப்புகளிடம் 6 மாத காலத்துக்குள் விண்ணப்பித்து ஆவண நகலை சமர்ப்பித்தால், மேற்சொன்னபடி ஓராண்டுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி ஆணையர் மெட்ரிகுலேசன், தொடக்கக்கல்வி இயக்குனர்களுக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்