நாமக்கல்
நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
|நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
தமிழக அரசு உத்தரவின்படி இந்த மாதம் 13-ந் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், நாமக்கல் (வடக்கு) மற்றும் நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
உதவி கலெக்டர், முதன்மைக் கல்வி அலுவலர், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு, வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினரால் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
அவசரகால வழி
அப்போது அவர் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, மாணவர்கள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளதா? என்றும், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, மாணவர்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டு உள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என்றும் தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, காப்புச்சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
காலஅவகாசம்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 314 பள்ளி வாகனங்களும், நாமக்கல் (வடக்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 245 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 559 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. தற்போது ஆய்வுக்கு 168 வாகனங்கள் கொண்டு வரவில்லை. மீதமுள்ள அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட உள்ளன.
குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அதை நிவர்த்தி செய்ய காலஅவகாசம் கொடுக்கப்படும். குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும். அதையும் மீறி இயக்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
செய்முறை விளக்கம்
இந்த ஆய்வில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர்களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சக்திவேல் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.