< Back
மாநில செய்திகள்
தனியார் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
நீலகிரி
மாநில செய்திகள்

தனியார் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

தினத்தந்தி
|
26 Nov 2022 12:15 AM IST

கூடலூரில் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தனியார் தோட்ட தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாசில்தார், போலீசார் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூடலூர்,

கூடலூரில் நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தனியார் தோட்ட தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாசில்தார், போலீசார் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பளம் வழங்கவில்லை

கூடலூரில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நிரந்தர தொழிலாளர்களுக்கு 4 மாதங்களாகவும், தற்காலிக தொழிலாளர்களுக்கு பல வாரங்களாகவும் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொருளாதார ரீதியாக குடும்பத்தை நடத்த முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் நிலுவை சம்பளத்தை வழங்க கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் அதிகாரிகள் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஆனால் அதன் பின்னரும் சம்பளம் கிடைப்பதில்லை என தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் தோட்ட தொழிலாளர்கள் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். தொடர்ந்து நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் சித்தராஜ், வருவாய் ஆய்வாளர் ஷக்கீர், போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் உள்பட போலீசார் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து தோட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் தரப்பில் ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் குணசேகரன், முகம்மது கனி ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இருப்பினும் மாலை வரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறும்போது, நிலுவை சம்பளம் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும். அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்